இந்த விருதில் ரூ.5 இலட்சத்திற்கான வரைவு காசோலையும், சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த ஒரு பெண் இவ்விருதினைப் பெற தகுதியுடையவராவார்.
இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருது" பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 30.06.2022-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்றும், விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

