Type Here to Get Search Results !

மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ரூ.1.51 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும். நலத்திட்டங்கள் பெறுவது மட்டுமல்லாமல் அத்திட்டங்களினால் சுயமாக வருவாய் ஈட்டி, தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திக்கொள்வதற்கு இத்தகைய அரசின் திட்டங்களை மூலதனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, போலனஅள்ளி கிராமத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் 258 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச்சு.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, போலனஅள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் இன்று (22.06.2022) நடைபெற்றது.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் முன்னிலை உரையாற்றினர்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு சிரமப்பட்டு பயணம் செய்து, சம்பந்தப்பட்ட அலுவலரை பார்க்கும் பொழுது, சம்பந்தப்பட்ட அலுவலர் பணி  நிமித்தமாக, வேற எங்கேயாவது சென்றிருந்தால், நம்முடைய கோரிக்கையினை தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் அலைச்சல் ஏற்படும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிரமங்களை குறைப்பதற்காக தான், மனுநீதி நாள் என்ற திட்டம் சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தகைய மனுநீதிநாள் முகாம் என்பது தற்பொழுது மக்கள் தொடர்பு திட்ட முகாமாக நடத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்பு திட்டம் முகாம் என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு உயர் அலுவலரும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அக்கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்திட நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி துறை அலுவலர்கள், அறிவிக்கப்பட்டுள்ள நாளில் அக்கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமாக மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்வது இம்முகாமின் முக்கிய நோக்கம்.

இதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்றைய தினம் நல்லம்பள்ளி வட்டம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, போலனஅள்ளி கிராமத்தில் நடைபெறுகின்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாகவும், இன்றைய தினம் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை பெறுகின்ற நிகழ்வாகவும் நடைபெறுகின்றது. ஏற்கனவே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, போலனஅள்ளி கிராமத்தில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதுபோல் நடத்தப்படுகின்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் துறை அலுவலர்கள் எடுத்துரைக்கின்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அரசின் சார்பில் எந்தெந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அத்திட்டங்களை பெறுவதற்கான தகுதிகள் என்ன, அத்திட்டங்களை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற அனைத்து கருத்துகளையும், பொதுமக்கள் நன்கு கேட்டு, அறிந்து, தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

மக்கள் அரசின் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் தான், அத்தகைய திட்டங்கள் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும், இப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு தொழில் அதிகமாக, இருக்கின்றதாக தெரிவித்தார்கள். 

இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமினை ஒட்டி, பல்வேறு துறைகளின்  சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி அரங்கில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள், நோய் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கறவை மாடுகளை வைத்து பால் கறந்து, விற்பனை செய்யும் பொழுது பாலின் தரம் குறைவாக உள்ளது என குறிப்பிடுவார்கள். அதன் காரணத்தை அறிந்து பாலின் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வகையான சத்தான தீவினங்களை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்.

எத்தகைய நோய் தடுப்பு மருந்துகளை கால்நடைகளுக்கு எந்தெந்த காலகட்டங்களில் செலுத்த வேண்டும் போன்றவற்றை அறிந்துகொள்ள இதுபோன்ற வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தரமற்ற பால் உற்பத்தியால் இலாபமும் குறைகிறது. சத்து குறைபாட்டால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு கால்நடைத்துறை அலுவலர்களிடம் உரிய அறிவுரையை பெற்று தங்கள் கால்நடைகளை சிறப்பாக வளர்க்க வேண்டும். அதற்கு இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும். முதியோர் உதவித்தொகை பெறுவதோ அல்லது இதர உதவித்தொகை பெறுவது மட்டுமே முக்கியம் என பொதுமக்கள் எண்ண வேண்டாம்.

இதுபோன்ற நலத்திட்டங்கள் பெறுவது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அத்திட்டங்களினால் சுயமாக வருவாய் ஈட்டி, தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திக்கொள்வதற்கு அரசின் திட்டங்களை ஒரு மூலதனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மக்களின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் மேம்படும். சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும். எனவே அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து கொண்டு தங்களுக்கான தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து 187 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்றைய தினம் இம்முகாமின் மூலம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவு துறை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 258 பயனாளிகளுக்கு ரூ.1,50,79,107/- மதிப்பீட்டிலான முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டைகள், பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகள், சிட்டா, அடங்கல், நுண்ணீர் பாசன கருவிகள், கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் நிலக்கடலை உடைக்கும் எந்திரம், ப்பு பயிருக்கு விதை விநியோகம், சுயதொழிலுக்கான ஆட்டோ, கறவை மாடுகள் மற்றும் காளாண் வளர்ப்பு மானிய நிதி உதவி, பயிர் கடன்கள், இலவச சலவை இயந்திரம், இலவச தையல் இயந்திரம், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், பொதுமக்கள் இன்றைய தினம் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம், வேளாண் பொறியியல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க உரையாற்றினர்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு. ஆ.பெருமாள், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. பெ.மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரு. ஜெ.மாதையன், திரு.க.காமராஜ், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சே.கந்தம்மாள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies