தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் வரவு செலவு கணக்கு உள்ளிட்டவை பொதுமக்களிடையே வெளிப்படையாக எடுத்துரைக்கப்பட்டது.
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பொதுபணிதுறை ஏரிகள், ஊராட்சி உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்டவைகளுக்கு கால்வாய்கள் மூலமாகவும், குழாய்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு செல்லுதல், பொது நூலகம், நெகிழி இல்லா கிராமத்தை உருவாக்குதல், விவசாயத்தை மேம்படுத்துதல், கிசான் கார்டு வழங்குதல், கால்நடை பராமரிப்பு, சாலை அமைத்தல் சுடுகாடு பராமரிப்பு, அரசு பள்ளிகளுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் விதமாக முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் கணபதி, ராதாமாரியப்பன், முத்துமணிஆனந்தன், மணி, ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், தாமோதிரன், சஞ்சீவன், கோவிந்தன், வேளாண் அதிகாரிகள், கால்நடை துறை அதிகாரிகள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், அமைப்புகள் என திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.