இந்த நிலையில் பூதன அள்ளி ஊராட்சிக்கு செல்லும் தார்சாலை அரை கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படு கிறது. நல்லம்பள்ளி, லலிகம் செல்லும் சாலையில் கோவிலூர் ஏரிக்கு அடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு செல்லும் பிரிவு சாலையில் இருந்து பூதன அள்ளி கிராமம் வரை அரை கிலோமீட்டருக்கு தார்சாலை உள்ளது. இந்த தார் சாலை தமிழ்நாடு வாணிப கழக கிடங்கு வரை நான்கு வருடத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. அந்த சாலையும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.
மேலும் வாணிப கழக கிடங்கில் இருந்து பூதன அள்ளி கிராமம் வரை உள்ள சாலை பல வருடங்களாக புதுப்பிக்கப்படாமல், ஏற்கனவே அமைத்த ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தினசரி பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் கிராமத்திற்குள் வருவதற்கு மறுத்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குண்டும், குழியுமாக உள்ள பாதையால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர், இதுகுறித்து பூதன அள்ளி பொதுமக்கள் கூறும்போது, 5 வருடத்திற்கு முன்பு பூதன அள்ளி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பூதன அள்ளி மக்களுக்கு சாலை வசதி முதல் குடிநீர் வசதி வரை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து இருந்தது.
தற்பொழுது இந்த பஞ்சாயத்து நிர்வாகம் பூதனஅள்ளி கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறோம்.
கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைக்கப்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் கடைக்கோடி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர், மத்திய மாநில அரசுகள் விவசாயத்திற்கு முன்னுரிமை வழ ங்கி அனைத்து ஊராட்சிகளு க்கும் தார்சாலை முதல் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
இந்த திட்டங்களை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தி வரும் நிலையில் முக்கிய பஞ்சாயத்துகளில் ஒன்றாக இருந்து வரும் பூதன அள்ளி பஞ்சாயத்தில் சாலை வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

