Type Here to Get Search Results !

பேரறிவாளன் விடுதலை: பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்.

பேரறிவாளன் விடுதலையை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடுவதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தமது பதவியை  ராஜிநாமா செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை, அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளசிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் அவரை  விடுதலை செய்தது. இதையடுத்து, பேரறிவாளன் விடுதலையை வரவேற்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும், திமுக கூட்டணி கட்சியினரின் செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான கோவி.சிற்றரசு (56) தமது பதவியை ராஜிநாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும், கட்சியின் தமிழ்நாடு கமிட்டிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து வழக்குரைஞர் கோவி. சிற்றரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது : கடந்த 1984 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளேன். உலக நாடுகள் போற்றும் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டுவதை ஏற்கமுடியவில்லை. எனவே, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். என்னைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏ.ஐ.சி.சி உறுப்பினர் சித்தையன், வட்டாரத் தலைவர்கள் ஆர்.சுபாஷ், எம்.ஆர்.வஜ்ஜிரம், சரவணன், வேலன், பூபதி ராஜா, நகரத் தலைவர் கணேசன், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் மோகன், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies