Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வெள்ளிச்சந்தை உள்வட்டம், பிக்கன அள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் இன்று (25.05.2022) நடைபெற்றது. இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர், இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:

அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், மக்கள் மனுக்களை வழங்க அரசு அலுவலகங்களை தேடி வருவதை தவிர்க்க மக்களைத் தேடி அரசுத்துறைகள் வருகை தந்து, மனுக்கள் பெறுகின்ற நிகழ்வாக இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாம்கள் அமைகின்றது. ஒரு மாதத்தில் உள்ள 4 வாரங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகின்ற மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றது. இம்முகாம்கள் மூலம் மக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் இன்றைய தினம் நடைபெறுகின்ற இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறுகின்ற வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறையில் செயல்படுத்ப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பற்றி விரிவாக விளக்கவுரையாற்றினார்கள். மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து இதுபோன்ற திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வேண்டும் என்பதற்காக இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

பொதுமக்கள் இதுபோன்று துறை அலுவலர்கள் தெரிவிக்கின்ற திட்டங்களை கூர்ந்து கவனித்து, அத்தகைய திட்டங்களில் தங்களுக்கு தகுந்த பயனுள்ள திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். மக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களையும், மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 

அதனடிப்படையில் பொதுமக்களும் தொடர்ந்து தகுதியற்ற முறையில் மனு அளிப்பதை தவிர்த்து, தகுதியான திட்டங்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் அளிக்க வேண்டும். வேளாண் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு வளர்ச்சிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான "மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டு, ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டிலுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா நேரலை நிகழ்ச்சிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 57 இடங்களிலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விவசாயியும் ஏதாவது ஒரு திட்டத்தை பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அரசு வேளாண் பெருமக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாய பெருமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு கிராம் ஊராட்சிகளில் நூலகங்கள் அமைத்தல், மயான மேம்பாடு, பள்ளிச்சுற்றுச் சுவர் அமைத்தல், தார்சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி உள்ள சிறப்பு மிக்க திட்டமான "இல்லம் தேடி கல்வித்திட்டம்" என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்திட கிராமங்களில் தன்னார்வலர்கள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. 

இதனால் குழந்தைகளின் கற்றலின் திறன் மேம்பட்டுள்ளது. பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வி பயிலுவதற்கு எந்த எந்த வகையான வேலைவாய்ப்புடன் கூடிய உயர் படிப்புகள் உள்ளன என்பதை அறியாமல் உள்ளனர், பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆக வேண்டும் என்று தான் விரும்புகின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்க கூடிய எண்ணற்ற உயர் கல்வி உள்ளது என்பதை பெற்றோர்களே மாணவ, மாணவியர்களோ அறியவில்லை. அதுபோன்ற உயர் படிப்புகளை மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக "நான் முதல்வன்" என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களும் அறிந்து கொள்ளும் விதமாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு உயர்க்கல்வி குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதனால் இம்மாணவ, மாணவியர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்க கூடிய கல்வியினை கற்பதற்கு இத்திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தருமபுரி மாவட்டம் முன்பு ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகவும், பெண் சிசுக்கொலை மரணம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டம் ஒரு மாவட்டமாக இருந்தது. ஆனால் தற்போது இவை அனைத்தும் மாறி அதிக குழந்தைகள் கல்வி கற்கின்ற நிலை உருவாகி உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், குழந்தை திருமணம் என்பது இன்னும் சில இடங்களில் நடைபெறுவதாக தகவல் வருகின்றன. குழந்தை திருமணம் என்பது சட்டப்படி குற்றம். அரசு பெண்ணிற்கான திருமண வயதை 18 ஆக அறிவித்திருந்தாலும், ஒரு பெண் தனது உடலளவில், மனதளவில் 21 வயது பூர்த்தி அடைந்தால் தான் திருமணத்திற்கான நிலையினை அடைய வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால், அவளை சார்ந்த அனைவருமே முன்னேறுவதற்கான வாய்ப்பு எளிதில் கிடைக்கும். 18 வயதிற்கு கீழ் நடக்கும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகின்றது. 

அத்தகைய திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் அறிந்திருந்த போதிலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, தகவல்கள் கிடைக்கப்பெற்று அரசு குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அத்திருமணம் செய்கின்ற மணமகன், அத்திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள், திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் உட்பட அனைவருமே குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறை தண்டனை பெறுவார்கள். எனவே குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதை தடுப்பதற்கும், அதுகுறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். 

குழந்தை திருமணம், பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க அரசு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. இதுகுறித்த புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கலாம். பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகின்ற நிலை உருவாகி உள்ளது. ஆண்கள் மட்டுமே கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ சிறந்தவர்கள் என்ற நிலை மாறி பெண்களும் உயர்ந்த கல்வியையும், சிறந்த வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளார்கள். ஆண் குழந்தை தேவை என்று கருதி அதிக குழந்தைகளை பெற்று குடும்பத்தை பெரிதாக்கி கொள்கின்றனர்.

இதனால் மிகுந்த சிரமத்திற்கும், வறுமைக்கும் உள்ளாகின்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. ஆணோ, பெண்ணோ அதிக பட்சம் 2 குழந்தைகள் போதும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2 பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார் அத்தோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அந்த 2 பெண் குழந்தைகளுக்கு தலா 25,000 வீதம் ரூ.50,000 வைப்புத்தொகையாக வழங்கப்படுகின்றது. அத்தகைய வைப்புத்தொகை அக்குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பிய பிறகு மேற்படிப்பிற்கோ அல்லது திருமணத்திற்கோ அத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, பெண் குழந்தைகள் ஒரு குடும்பத்தின் கண்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்வதோடு பெண் குழந்தைகளை கட்டாயம் நன்கு படிக்க வைக்க வேண்டும். வேலை செய்து வருமானம் ஈட்டுகின்ற நிலையை உருவாக்கி தற்சார்பு உடையவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து 124 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 49 மனுக்கள் தகுதியற்ற மனுக்களாக கண்டறியப்பட்டுள்ளது. 34 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை திரும்ப திரும்ப தொடர்ந்து அளிப்பதை தவிர்த்து, எந்த திட்டத்திற்காக மனு அளிக்கின்றோம் என்பதையும், அத்திட்டத்திற்கான தகுதியினையும் அறிந்து, உரிய ஆவணங்களோடு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

இன்றைய தினம் இம்முகாமின் மூலம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 192 பயனாளிகளுக்கு ரூ.39,04,563 மதிப்பீட்டிலான இருளர் சாதிச்சான்று, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண நிதியுதவி, இயற்கை மரணம் உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், நுண்ணீர் பாசன கருவிகள், வரப்பு பயிருக்கு விதை விநியோகம், இலவச சலவை இயந்திரம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் இன்று அளிக்கக்கூடிய அனைத்து மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும்.

எனவே, பெண்களின் வளர்ச்சிக்கும், பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவியாக இருப்பது கல்வி. அத்தகைய கல்வியை அனைவரும் கற்று, பெண்கள் வேலைவாய்ப்பினை பெற்று, வருவாய் ஈட்டி, தற்சார்பு நிலையை அடைந்திட முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம். மக்களின் வளர்ச்சிக்காகவும், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து, தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர் தெரிவித்தார். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள். பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம், வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க உரையாற்றினர்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் மரக்கன்றினை நட்டுவைத்தார்கள். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் திரு.வி.இராஜசேகரன், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.பெ.சாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.மு.தீபா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திரு.எம்.பி.செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ரா.மணிமேகலை, பிக்கனஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சு.பத்மாவதி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies