கர்நாடகா மாநிலம் பெங்களுரு அருகே ஒசஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெயின்டர் தொழிலாளி சம்பத். இவர் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் ராஜா என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார், அவருடைய மகன் ஹர்சா (வயது. 20) டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வந்தார்.
ஹர்சா நேற்று காலை 8 மணி சுமாருக்கு பொம்மனூர் ஏரியில் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால். குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்த போது ஏரியின் கரையில் ஹர்சாவின் செருப்பு மற்றும் உடைகள் இருந்தன. எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேமடைந்து ஏரிக்குள் மூழ்கி தேடி பார்த்த போது ஹர்சா நீருக்குள் மூச்சு திணறி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

