தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், பெங்களூர், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், பழனி, தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்ட, மாநில பகுதிகளுக்கும், நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
பேருந்துகள் நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்கள் காலை முதல் இரவு வரை நிறுத்தப்படுவதால் பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் குறுக்கு மறுக்காக நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அகற்றி பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் (பிட்) நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.