தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை கிராமாத்திற்குள் புகுந்து கோழிகளை பிடித்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் ஆட்டுப்பட்டியில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த ஒரு தாய் ஆட்டையும் இரண்டு குட்டிகளையும் கடித்து குதறி கொன்று தின்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறுத்தையை பிடிக்காமல் இறந்த ஆடு, கோழிகளை வனத்துறையினர் பார்வையிட்டு செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

