தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் இடைநிலை பத்தாம் வகுப்பு (10-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை இன்று (06.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்புக் கல்வியாண்டில் (2021-22) இடைநிலை பத்தாம் வகுப்பு (10-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் இன்று (06.05.2022) தொடங்கி 30.05.2022 வரை தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலும் இன்றைய தினம் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் இடைநிலை பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நாளை 06.05.2022 தொடங்கி 30.05.2022 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி (ADW School), 5 உண்டி, உறைவிட பள்ளி (GTR Schools), 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுய நிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 11,895 மாணவர்களும், 11,033 மாணவியர்களும் என மொத்தம் 22,928 மாணவ, மாணவியர்களும், 860 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23,788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர்.
இத்தேர்வுப் பணிகளில் 1623 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 99 முதன்மை கண்காணிப்பாளர்களும், 99 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படைகளும், 29 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவிக்காக 155 சொல்வதை எழுதுபவர்களும் (Scribe), 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மொத்தம் 2127 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தேர்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களும் இத்தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்தார்.