பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள குப்பனூரில் 15க்கும் மேற்பட்ட போயர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு வழிப்பாதை இல்லை. இதனால், இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்கு செல்வதற்கும், சடலங்களை எடுத்து செல்வதற்கும் வழியில்லாமல் வருடகணக்கில் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குப்பனூரைச் சேர்ந்த ராமக்கள் (65) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார், இவரது சடலத்தை எடுத்துச் செல்ல வழியில்லாமல் அவரது சடலத்தை வீட்டின் அருகே புதைத்தனர்.
இதையடுத்து, குப்பனூரில் வசிக்கும் போயர் சமூக மக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிவிட்டு, ஊரை விட்டு வெளியில் செல்வதாக கூறுகின்றனர்.
கிராம மக்கள் வெளியில் செல்வதற்கு வழிப்பாதை இல்லாததால் இங்குள்ள இளைஞர்களுக்கு அவர்களது உறவினர்கள் பெண் தருவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதேபோல், குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிப்பதாக குப்பனூரைச் சேர்ந்த குப்பம்மாள், பவுனு, சரோஜா, சாந்தா, கண்ணம்மாள் உள்ளிட்ட கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.