தர்மபுரி மாவட்டம், அரூர் பிடிஓ ஆபீஸ் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் ஜடையாண்டி தலைமையில் சங்கப் பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, தமிழரசன், பெருமாள், தீப்பாஞ்சி, சாந்தி, தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று மனுக்களை திரும்பப்பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அரூரில் இருந்து கீளானூர் வழியாக கொத்தனாம்பட்டி வரை காலை 8 மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 7 முறையும், வீட்டு மனை பட்டா மற்றும் மயான வசதி வேண்டி 2007 முதல் 2021 வரை 7 முறை போராட்டம் நடத்தி அதிகாரியிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
கீளானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு சாலை வசதி கேட்டு 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 5 முறையும், தெரு விளக்கு அமைக்க கோரி 2019 முதல் 2021 வரை 3 முறையும்,குடிநீர் வசதி கேட்டு 2011 முதல் 2022 வரை 5 முறையும் போராட்டங்கள் நடத்தி மனுக்கள் அதிகாரியிடம் வழங்கினோம். இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கொடுத்த மனுக்களை திரும்பப்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய தலைவர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் குமரேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.