தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை ஊராட்சியில் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருகை தருகின்றார்கள்.
பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இன்று இத்திருக்கோயிலுக்கு நேரில் வருகை தந்து, தீர்த்த மலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிவதலங்களில் சிறப்பு பெற்ற கோயில்களில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக தீர்த்தமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோயில் திருதலம் ஆகும்.
இத்திருத்தலத்திற்கு மலையில் ஏறிச்செல்ல வசதியாக ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளன இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மலை மேலே ஏறும்போது அவர்களுக்கு மலையேறும் படிகளில் இடையிடையில் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கு குறைந்தது 3 கழிப்பறை வசதியுடன் சுடிய ஓய்வு எடுத்துச் செல்லும் அறைகள் அமைப்பதற்கும், ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும், மலையின் மேல் உள்ள பக்தர்கள் உடைமாற்றும் அறை நவீனபடுத்தப்படுவதோடு அங்கு போதிய கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளை சுற்றுலாத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு உரிய திட்ட மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றவுடன் அந்தந்த துறைகளின் மூலம் நிதி பெறப்பட்டு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள், வயதான முதியோர்கள் தீர்த்த கீரிஸ்வரர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்திட ரோப்கார் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அரசிற்கு தெரிவிக்கப்பட்டு, அரசின் உத்தரவின்படி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. வே. முத்தையன், அரூர் வட்டாட்சியர் திருமதி. மணிமேகலை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.ஏ.ஆர்.பிரகாஷ், உதவி பொறியாளர் திரு.ராமச்சந்திரன், அருள்மிகு ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் திரு.சரவணன், தீர்த்தமலை ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ச.கலைவாணி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.