இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு , பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு , வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள்,மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 604 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை மனுதாரருக்கு அளித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தருமபுரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மகளிர் உள்ளிட்ட 75 மகளிர்களுக்கு தலா ரூ.6,000/- வீதம் ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான 75 மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் விதமாக இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி , இஆப., அவர்கள் 5 மகளிருக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி .வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவாச சேகர், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ச.பவித்ரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.