இந்திய அரசின் வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறையால் 'உழவர்களுடனான கூட்டிணைவே நமது முன்னுரிமை" என்கிற சிறப்பு முகாம் நாடு முழுவதும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை நடத்தப்படவுள்ளது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாதவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் கடனாக ரூ.3.00 இலட்சம் வரையிலும், பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற வேளாண்மை உபத்தொழில் செய்வோருக்கு ரூ.2.00 இலட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3.00 இலட்சம் கடன் பெறலாம். உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் முறையாக தவணை மாறாமல் திருப்ப செலுத்தினால் 3% வரை வட்டி மாணியம் பெறலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.
உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா, சிட்டா அடங்கல்) ஆதார் அட்டை கட்டாயம், பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகளிலும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகளின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அதன் இணை ஆவணங்களுடன் நேரிடையாக வங்கி கிளைகளில் சம்மந்தப்பட்ட வங்கி வணிகத் தொடர்பாளர்கள் மூலமாகவோ, மாவட்ட வேளாண் துறை அலுவலகம், மாவட்ட தோட்ட கலைத் துறை அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ சமர்ப்பிக்கலாம்.
இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு செய்யும் முறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் 25.04.2022 முதல் 01.05.2022 வரை நடைபெறவுள்ளது.
எனவே, விவசாயிகள் இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இது குறித்த விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.