தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், இயங்கி வரும் சிறப்பு மாதிரிப்பள்ளியில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான 9-ஆம் வகுப்பிற்கு புதிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பேச்சு
தருமபுரி மாவட்டம், தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், இயங்கி வரும் சிறப்பு மாதிரிப்பள்ளியில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான 9-ஆம் வகுப்பிற்கு புதிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை இன்று (29.04.2022) நடைபெற்றது.
இம்மாணவ, மாணவியர்கள் சேர்க்கையினை மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தொடங்கி வைத்து, பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி என்ற நிலையினை உருவாக்கிட பல்வேறு சிறப்பு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சிறப்பு மாதிரிப் பள்ளிகளை உருவாக்கிட ஆணையிட்டு, தமிழகத்தில் முதல்முதலாக 10 மாவட்டங்களில் இப்பள்ளிகளை துவங்கிட உத்தரவிட்டார்கள்.
இதன்படி, தமிழகத்தில் தருமபுரி, அரியலூர், கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம். திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் முதற்கட்டமாக கடந்த 2021 அக்டோபர் மாதத்திலிருந்து 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இம்மாதரிப் பள்ளியில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மாதிரிப் பள்ளி கடந்த 2021-ஆம் தொடங்கப்பட்டு இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் 40 மாணவர்கள் மற்றும் 40 மாணவியர்கள் என மொத்தம் 80 மாணவர்கள், மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தற்பொழுது 2022-2023 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் 40 மாணவர்கள் மற்றும் 40 மாணவியர்கள் என மொத்தம் 80 மாணவர்கள், மாணவியர்கள் இன்றைய தினம் இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் மே மாதம் முதல் வாரத்திலும் இச்சிறப்பு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படவுள்ளனர்.
இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வகுப்பறை வசதி, தங்கும் விடுதி வசதி, அவ்விடுதியில் குடிநீர்,கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு சிறப்பான கல்வியை அளித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் சிறப்பான கல்வி மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்பள்ளியில் பயிலும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, அம்மாணவர்களுக்கு சிறப்பான கல்வி மூலம் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றோம். இதற்கு பெற்றோர்களாகிய நீங்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையிலிருந்து தற்போது கல்வித்துறையில் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் இந்நிலை மாறி கல்வியில் முன்னிலை பெறும் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய இச்சிறப்புமாதிரி பள்ளிகளை உருவாக்கி கொடுத்துள்ளதோடு, மாணவ, மாணவியர்கள் சிறந்த கல்வியை கற்று, எதிர்கால வாழ்வை வளமாக அமைத்துக்கொள்ள சிறப்பான கல்வியை அளித்து வருகின்றது. இதனை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பான கல்வியை கற்றிட வேண்டும்.
உங்கள் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் சிறப்பு மாதிரிப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் கௌதம், சக்திகுமார், மாணவி சௌந்தர்யா ஆகியோர் இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் கற்பிக்கும் முறை, விடுதி வசதிகள், அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்ட தங்களது அனுபவங்களை புதிய மாணவ, மாணவியர்களிடம் பகிர்ந்து கொண்டு உற்சாகம் ஊட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்னை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.சண்முகவேல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் திருமதி.மஞ்சுளா, உதவி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிக்குமார், மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் (கூடுதல் பொறுப்பு) திரு.மணிவண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.