தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராம சபைக்கூட்டம் வருகின்ற 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் 01.05.2022 அன்று இக்கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.
இக்கிராம சபை கூட்டத்தினை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது:-
- கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விரிவாக விவாதித்தல்.
- கிராம ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விரிவாக விவாதித்தல்.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் ஊராட்சிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து விவாதித்தல்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் விபரம், தொழிலாளர் வரவு செலவு திட்டம், பணி முன்னேற்ற அறிக்கை, சாத்தியமான பணிகள் குறித்து விவாதித்தல்.
- கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடங்களில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவாதித்தல்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்திட ஊட்டச்சத்து இயக்கத்தில்(POSHAN ABIYAAN) பொது மக்களை பங்கு பெற செய்வது குறித்து விவாதித்தல்.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல் மற்றும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
- தூய்மை பார்த இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு "முன்மாதிரி கிராம விருது" வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி மீள வாங்கும் கொள்கையினை அறிமுகப்படுத்துதல் மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
- "ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்" கீழ் கிராம ஊராட்சியில் 100% அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்து விவாதித்தல்.
- வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களை குறித்து விவாதித்தல்.
- "நமக்கு நாமே திட்டத்தின்" கீழ் பொது சொத்துக்களை உருவாக்கிட பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஒப்பந்ததாரர் பங்களிப்பு குறித்து விவாதித்தல்.
- 2012-13 ஆம் ஆண்டில் மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட "இலக்கு மக்கள் பட்டியலை" மறுஆய்வு செய்து ஏழை, மிகவும் ஏழை, மற்றும் நலிவுற்றோர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான இறுதி பட்டியலை 15.08.2022கிராம சபாவில் வைத்து ஒப்புதல் பெறுவது குறித்து விவாதித்தல்.
- 2021-2022 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் பயனாளிகள் விபரம் பற்றி விவாதித்தல்
- 2022-2023 ஆம் ஆண்டுக்கான "தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன்பயிற்சி திட்டத்தின்" கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல்.
- குழந்தைகளுக்கான அவசர உதவி எண் (Child Help Line) 1098 மற்றும் 14417- ஐ பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவும், பயன்படுத்துதல் குறித்தும் விவாதித்தல்.
- மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக முதியோர் உதவி அழைப்பு எண் 14567-ஐ பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
- விவசாயிகள் கடன் அட்டையின் பயன்கள், அவற்றை பொதுமக்கள் பெறும் விதிமுறைகள் மற்றும் அதற்கான தகுதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
- தருமபுரி மாவட்டத்தை 'சிறு தானியங்கள்(Millet) சிறப்பு மண்டலமாக" தமிழக அரசு அறிவித்துள்ளதைப் பதிவு செய்தல்.
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.