இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் கலந்துகொண்டு பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதன்படி இன்றைய தினம் 2-வது முறையாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வாய்ப்பை வழங்கியமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிலாளர்களை காப்பதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் பல்வேறு நல வாரியங்களை அமைத்து செயல்படுத்தினார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்றனர். அதன்பிறகு, தொழிலாளர்களை பாதுகாக்க கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படாமலும், பல்வேறு வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு உரிய உதவிகளும் கிடைக்காமல் இருந்த நிலை மாறி, தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், முதன்முதலில் என்னை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவராக நியமித்து, தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளையும், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும் எதையெல்லாம் செயல்படுத்த வேண்டுமோ, அவற்றையெல்லாம் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவராக நான் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய அனைத்து திட்டங்களையும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன்.
கடந்த 2021 அக்டோபர் மாதம் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து, தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். அதனை தொர்ந்து இன்றைய தினமும் உங்களை சந்தித்து, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை எளிமைப்படுத்த பல்வேறு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின், 53 வகையான கட்டுமானத் தொழில்கள் மற்றும் 60 வகையான அமைப்புச் சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 18 வகையான நல வாரியங்கள் மூலம் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை 2,23,122 தொழிலாளர்களும், அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்தில் 21,915 தொழிலாளர்களும், ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 5,027 ஓட்டுநர்களும் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். 2021-2022 நிதியாண்டில் மட்டும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 24,803 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.18.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்தில் 2,123 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 393 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.20.85 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 3 நலவாரியங்களில் 27,389 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.20.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 2021-2022 நிதியாண்டில் மட்டும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 19,599 நலவாரிய உறுப்பினர்களுக்கும், அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்தில் 1,812 நலவாரிய உறுப்பினர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 146 நலவாரிய உறுப்பினர்களுக்கும் என மொத்தம் 3 நலவாரியங்களில் 21,557 நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளன. பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்க்கைக்கென 42 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.19.60 இலட்சம் நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த 11 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.55.00 இலட்சம் விபத்து மரண நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் இணையவழியில் திவு செய்வதற்கு பதிவு முறையை எளிமையாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் இறந்தால் வாரியத்தின் மூலம் ரூ.5.00 இலட்சமும், சாலை விபத்தில் இறந்தால் ரூ.2.00 லட்சமும், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000/-மும், படிப்பிற்கேற்ற கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.
தற்போது இது போன்ற உதவித்தொகை அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு தேவையான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் உடனடியாக அந்தந்த நலவாரியங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் பேசினார்.
இன்றைய தினம் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு நலவாரியங்களில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 5,157 நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,08,49,450 கல்வி உதவித்தொகையும், 30 நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1,10,000 திருமண நிதி உதவியும், விபத்தில் மரணமடைந்த 1 நபரின் குடும்பத்தாருக்கு ரூ.1,05,000 விபத்து மரண நிவாரண நிதி உதவி மற்றும் ஈமசடங்கு நிதி உதவியும், இயற்கை மரணமடைந்த 75 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.19,19,000 இயற்கை மரண நிவாரண நிதி உதவி மற்றும் ஈமசடங்கு நிதி உதவியும், 929 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.9,29,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 11,953 நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1,81,23,748 மதிப்பிலான பாதுகாப் கவசம், வெல்டிங் முக கவசம், பாதுகாப்பு காலணிகள், இரப்பர் கையுறைகள், பாதுகாப்பு பெல்ட், பாதுகாப்பு கண்ணாடிகள், பிரதிபலிக்கும் ஜாக்கெட்டுகள், மின்சார பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும் என மொத்தம் 18,145 பயனாளிகளுக்கு ரூ.3,20,36,198 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக இவ்விழா மேடையில் 30 பயனாளிகளுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.கே.பி.இந்தியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திரு.பி.என்.பி.இன்பசேகரன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் திரு.ஜெ.பழனி, தொழிற்சங்க பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.