ஒவ்வொரு திருநங்கையும் உரிய இலக்கினை எட்டிட அனைவரும் சிறந்த கல்வியை கற்பதோடு, முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டால் உயர்ந்த இடத்தினை எளிதில் அடையலாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 மார்ச், 2022

ஒவ்வொரு திருநங்கையும் உரிய இலக்கினை எட்டிட அனைவரும் சிறந்த கல்வியை கற்பதோடு, முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டால் உயர்ந்த இடத்தினை எளிதில் அடையலாம்.

உலக திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் இன்று நடைபெற்ற உலக திருநங்கைகள் வெளிப்பாட்டு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேச்சு.

உலக திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம் சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் உலக திருநங்கைகள் வெளிப்பாட்டு தின விழா இன்று (31.03.2022) நடைபெற்றது.  இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள். இவ்விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கோவிந்தசாமி அவர்கள், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.சம்பத்குமார் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அனைவருக்கும் உலக திருநங்கைகள் தின விழா - உலக திருநங்கைகள் வெளிப்பாட்டு தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தருமபுரி மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாய் மாவட்டமாக திகழ்ந்து வருகின்றது. எனவே இந்த தருமபுரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பதற்கான முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும் என்பதற்காக தான் தருமபுரி மாவட்டத்தில் உலக திருநங்கைகள் வெளிப்பாட்டு தினவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடிட அரசு ஆணையிட்டு, அதன்படி இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மகளிரின் வாழ்வாதார உயர்விற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிருக்கென நடைபெற்ற சிறப்பு விழாவில் காணொளி காட்சியின் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் உரையாற்றிய அன்றைய தினம் கூட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை செல்வி.வசந்தி அவர்களிடம் திருநங்கைகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் காணொளி காட்சியின் வாயிலாக உரையாடினார்கள். எனவேதான், தருமபுரி மாவட்டம் என்பது திருநங்கைகளின் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டமாக இருக்க வேண்டும் என்பதும், திருநங்கைகளின் வாழ்க்கை தரம், வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் தருமபுரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநங்கைகளுக்கான மருத்துவ ஆலோசனை குறிப்புகளை இங்கு காணொளி வாயிலாக நேரலையில் சிறந்த உளவியல் நிபுணர் டாக்டர்.சாலினி அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது திருநங்கைகளும் சந்தேகங்களையும், விளக்கங்களையும் கேட்டறிந்தார்கள். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என்ற வேறுபாடற்ற அனைவரும் சமம் என்ற உணர்வை உருவாக்கிட வேண்டும். திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கை தர உயர்விற்கும் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. திருநங்கைகள் அனைவரும் சுய மரியாதையோடு சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை மையமாக கொண்டு திருநங்கைகள் அனைவரும் சுயமாக தொழில் தொடங்கி, வருவாய் ஈட்டி, வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள அரசின் திட்டங்களை அனைத்து திருநங்கைகளும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

அனைவரின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுவது கல்வி ஒன்றே. அத்தகைய கல்வியை திருநங்கைகள் அனைவரும் பெற வேண்டும். அதற்கு முதல்படி கல்வி கற்பது. அவ்வாறு கல்வி கற்கும் ஒவ்வொரு திருநங்கையும் உரிய இலக்கினை எட்டிட அனைவரும் சிறந்த கல்வியை கற்பதோடு, முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டால் உயர்ந்த இடத்தினை எளிதில் அடையலாம். திருநங்கைகளுக்கு ஏராளமான திறமைகள் உள்ளன. அதற்கு உதாரணமாக இன்றைய தினம் திருநங்கைகள் நடத்திய அழகிய கலைநிகழ்ச்சிகள் கூட அவர்களின் சிறப்பான திறமைகளை நாம் கண்டோம். தருமபுரி மாவட்டத்தில் கே.பிரித்திகா யாசினி என்ற திருநங்கை காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் எவ்வாறு கல்வி கற்று காவல் உதவி ஆய்வாளராக பணியிடத்தை பெற்றாரோ, அதேபோல அனைவரும் சிறந்த இடத்தை பெற வேண்டும். கடந்த வாரத்தில் கூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு பணிநியமன ஆணை வழங்கியதை அனைவரும் அறிந்திருப்போம். ஏற்கனவே ஊராட்சி செயலராக பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் தான் திருநங்கையாக மாற வேண்டும் என்பதற்காக விடுப்பில் சென்றுவிட்டு திருநங்கையாக மாறி மீண்டும் அம்மாவட்டத்திற்கு வருகைதந்து பணிவழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தவுடன் அவருக்கு மீண்டும் ஊராட்சி செயலர் பணியிடத்திற்கான ஆணை வழங்கப்பட்டு அவர் அப்பணியில் சேர்ந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 

எனவே திருநங்கைகளுக்கான வாழ்க்கை தர உயர்விற்கு தேவையானவற்றை அரசு செய்து கொடுக்க முன்வந்துள்ளது. அதனை திருநங்கைளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே திருநங்கைகள் தங்களை ஒரு கூட்டிற்குள் அடைத்துக்கொள்ளாமல் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து உயர்ந்த இடத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இங்குள்ள திருநங்கைகள் மாவட்ட ஆட்சியராகவோ அல்லது காவல்துறை உயர் அதிகாரியாகவோ அல்லது உயர்ந்த பதவியை அடைவதற்கு அனைவரும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும். அதை ஒரு இலட்சியமாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வருவாய்த்துறையின் சார்பில் 11 திருநங்கைகளுக்கு ரூ.2.20 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் 5 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.9.90 இலட்சம் மானிய நிதியுதவியுடன் வீடு கட்டுவதற்கான ஆணையினையும். தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம் சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பேளாரஅள்ளி ஊராட்சியை சேர்ந்த புதூர் மாரியம்மன் திருநங்கைகள் சுய உதவிக்குழு மூலம் சுகாதார நாப்கின் உற்பத்தி மையம் துவங்குவதற்கு ரூ.1.60 இலட்சம் நிதியுதவியும், 4 திருநங்கைகளுக்கு தனிநபர் கடனுதவியாக தலா ரூ.20,000 வீதம் ரூ.80,000 தனிநபர் கடனுதவிகளையும், இலவச தையல் பயிற்சி முடித்த 10 திருநங்கைகளுக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வி.ஜெட்டி அள்ளியைச் சேர்ந்த ரோஜாக்கூட்டம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஆதார நிதியுதவியாக ரூ.15,000-மும், சுய தொழில் மூலம் ஆட்டோ ஓட்டி வருவாய் ஈட்டுவதற்காக திருநங்கை சாந்தினி மற்றும் திருநங்கை மகிளா ஆகிய இருவருக்கும் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோக்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான நலவாரிய அட்டைகள் 50 திருநங்கைகளுக்கும் என மொத்தம் 84 திருநங்கைகளுக்கு ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 


முன்னதாக திருநங்கைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த உளவியல் நிபுணர் டாக்டர்.சாலினி அவர்கள் திருநங்கைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து காணொளி வாயிலாக நேரலையில் உரையாற்றினார்கள். தனித்திறமைகளை வெளிப்படுத்திய திருநங்கைகளுக்கும் மற்றும் திருநங்கைகளுக்கான சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைத்த களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன் இஆப., தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் திரு.பாபு, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திருமதி.நிவேதா, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.ப.கி.கிள்ளிவளவன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ச.பவித்ரா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.கவிதா, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க மாநில வளப்பயிற்றுநர் திரு.சி.மணி உட்பட அரசு அலுவலர்கள், திருநங்கைகள், கல்லூரி மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad