தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரித்தி (வயது 19). இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி பிரித்திக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதில் மாணவிக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் மாணவி பிரித்தி, மனஉளைச்சல் அடைந்தார்.
இதனால் கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரித்தி, வீட்டில் தூக்குப்போட்டார். இதில் உயிருக்கு போராடிய மாணவியை அவரது குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பிரித்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
