மாரண்டஹள்ளி, மே.01:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசு டவுன் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த சாமியார் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார் – காவ்யா தம்பதியரின் 2 வயது மகள் வினோதினி, இன்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி செல்ல வேண்டிய 19-ஆம் எண் டவுன் பேருந்து பழுதானதால், அதற்குப் பதிலாக 4-ஆம் எண் பேருந்து இயக்கப்பட்டது. சாமியார் நகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென நிலை தடுமாறி பேருந்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் பின்சக்கரம் குழந்தையின் மீது ஏறியதால், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)