மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இஆப. அவர்கள் இன்று தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி, காரிமங்கலம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலை முன்னிட்டு பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய வாக்குச் சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 65 வேட்பாளர்களும், காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 64 வேட்பாளர்களும், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 73 வேட்பாளர்களும், பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 2 வார்டுகளுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளது போக மீதமுள்ள 16 வார்டுகளுக்கு 56 வேட்பாளர்களும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 64 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் அவர்கள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழுமையாக பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருப்பு அறையில் வைத்து காவல் துறை பாதுகாப்புடனும், சி.சி.டி.வி கேமராக்களின் பாதுகாப்புடனும் வைத்திட வேண்டும் எனவும் உத்தாரவிட்டார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் 1௦ பேரூராட்சிகளில் உள்ள 230 வாக்குச் சாவடிகளில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த 2 வாக்குச்சாவடிகள் நீங்கலாக 228 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.
இதில் தருமபுரி நகராட்சி மற்றும் 1௦ பேரூராட்சிகளில் மொத்தம் 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்ரிசர்வ் ஒதுக்கீடு 47 சேர்த்து மொத்தம் 275 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தருமபுரி நகராட்சி மற்றும் 1௦ பேரூராட்சிகளுக்கும் ஏற்கனேவே ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு நகராட்சி மற்றும் அந்தந்த பேரூராட்சிகளில் இருப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வின் போது அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் / தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் - 2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 1௦ பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப. அவர்கள் இன்று (14.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலிகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்துதல் பணிகள், வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருகை தந்து அந்தந்த வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்ல ஏதுவாக தனித்தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சிணி, இஆப. அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின் போது, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
.gif)
