தருமபுரி மாவட்டத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" மூலம் 75,751 பேர் பயனடைந்துள்ளனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 பிப்ரவரி, 2022

தருமபுரி மாவட்டத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" மூலம் 75,751 பேர் பயனடைந்துள்ளனர்.

"மக்களைத் தேடி மருத்துவம் " எனும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தின் மூலம் மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் துயரங்களை துடைக்கும் அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுதிகழ்ந்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழு உறுதிமொழிகள் என்ற பத்தாண்டுத் தொலைநோக்கு திட்டத்தில் 'அனைவருக்கும் நல்வாழ்வு" என்பது ஒரு முக்கிய உறுதிமொழியாக கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் 5.8.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 258 கோடி ரூபாய் செலவில் "மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்" என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"மக்களைத்தேடி மருத்துவம்" திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு. படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு. இன்று கிராமப் பகுதிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையுள்ள அனைத்து பகுதிவாழ் மக்களும் பயன்பெறும் வகையில், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள். இயன்முறை மருத்துவர்கள். நோய் ஆதரவுச் செவிலியர் ஆகிய களப்பணியாளர்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நலப் பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

தருமபுரி மாவட்டத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் கள அளவில் 225 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் (Women Health Volunteers) 8 இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapists), 8 நோய் ஆதரவுச் செவிலியர் (Pallative Nurses), 147 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் (Mid Level Health Provider) ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர். மேலும், அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 61 'மக்களைத்தேடி மருத்துவ செவிலியர்கள்' தொற்றா நோய் சேவைகளை வழங்குவதோடு, பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்குவதோடு, களஅளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளை வழங்குகின்றனர்.

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 41,321 நபர்கள் உயர் இரத்த அழுத்த சிகிச்சை (HT) பெறும் பயனாளிகளாகவும், 17,388 நபர்கள் நீரழிவு நோய் சிகிச்சை (DM)பெறும் பயனாளிகளாகவும், 7,979 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் சிகிச்சை (Both) பெறும் பயனாளிகளாகவும், 4,402 நபர்கள் இயன்முறை சிகிச்சை (Physiotherapy) பெறும் பயனாளிகளாகவும், 4,661 நபர்கள் நோய் ஆதரவு சேவை (Palliative) பயனாளிகளாகவும் என மொத்தம் 75,751 பயனாளிகளின் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவையினை பெற்று பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad