Type Here to Get Search Results !

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு.

தருமபுரி மாவட்டம் தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் 2021-2022-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்காக 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (19.01.2022) நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள் தலைமை வகித்தார். 

இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருடி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தண்ணீர் திறந்து வைத்து பேசும் போது தெரிவித்தாவது:-

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3280 ஏக்கர் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 19.01.2022-ம் தேதி முதல், முதல் நனைப்பிற்கு 5 நாட்களும், இரண்டாவது நனைப்பிற்கு 5 நாட்களும், மொத்தம் 10 நாட்கள் தண்ணீர் விட்டும், 5 நாட்கள் நிறுத்தியும், ஆக 4 நனைப்பிற்கு 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டு தொப்பையாறு அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 22 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 48 கனஅடி வீதமும் ஆக மொத்தம் 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமம், கம்மம்பட்டி கிராமம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி கிராமம், வெள்ளார் கிராமம், தெத்திகிரிப்பட்டி கிராமம், மல்லிகுந்தம் கிராமம் என மொத்தம் 6 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

விவசாயத்திற்கு மக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்.பி.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், பொதுப்பணித்துறை நீர் ஆதார கண்காணிப்பு பொறியாளர் சாம்ராஜ், செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மோகனப்பிரியா, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies