தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்பி. வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்திலிருந்து தருமபுரி நகர பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் இது குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தருமபுரி நகரப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டு, பஞ்சப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தருமபுரி நகர மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்குடிநீர் வழங்கும் திட்டத்திலிருந்து மீண்டும் தருமபுரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தருமபுரி நகரின் மேற்கே 55 கி.மீ. தொலைவில் சின்னாறு அணையில் பஞ்சப்பள்ளி என்கிற இடத்தில், தருமபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி நகரில் உள்ள 1 முதல் 33 வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தினசரி 110 LPCD குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் இக்கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு செல்லும் பகுதிகளில் உள்ள பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்திலிருந்து தருமபுரி நகர பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தருமபுரி நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் இக்குடிநீர் திட்டத்தினை சீர்செய்யும் வகையில் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் பிரதான குடிநீர் குழாய் மற்றும் நீர்மூழ்கி மின்மோட்டார்கள் சரி செய்யப்பட்டு இன்றைய தினம் தருமபுரி நகர மக்களுக்கு மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி நகராட்சியில் உள்ள வார்டு பகுதிகளுக்கு இக்குடிநீர் வழங்கப்படுவதால், இதன் மூலம் சுமார் 37,800-க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் .பி.சுப்பிரமணி, திரு.பி.என்.பி. இன்பசேகரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் திரு ஆர் ஜெயசீலன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)
