தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகள், வேதபாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சண்முகம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
.gif)
