Type Here to Get Search Results !

ரூ.78 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி; பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வகையில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்துக்கு தினமும் 450 பஸ்கள் வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாமல் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறநகர் பஸ் நிலையத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நாளடைவில் குண்டும், குழியுமாய் போக்குவரத்துக்கு உபயோகம் அற்ற நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வந்தது.

இந்த நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் குண்டும், குழியுமான சாலையில் இயக்கப்படுவதால் அடிக்கடி பஸ்கள் பழுதடைவதுடன் டயர்கள் பஞ்சர் ஆகும் நிலை ஏற்படுகிறது. பஸ்ஸில் இருந்து இறங்கும் பயணிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதால் புறநகர் பஸ் நிலையத்தில் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதேபோன்று பஸ் நிலையத்தில் புதிய தார்சாலை உடனே அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து புறநகர் பஸ் நிலையத்தில் புதிய தார்சாலை அமைக்க கலெக்டர் திவ்யதர்ஷினி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி தர்மபுரி நகராட்சி சார்பில் புறநகர் பஸ்நிலையத்தில் மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் இந்த புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பஸ்நிலையத்தில் உள்ள பழைய தார் சாலைகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மேடு பள்ளங்கள் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவணபாபு மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தார் சாலை பணிகளை விரைந்து திறக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies