கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் கிராமத்தை சேர்ந்த செட்டி பெருமாள் (70) விவசாயியான இவருக்கு பூர்வீகமாக இருந்துள்ள சுமார் 1.30 ஏக்கர் சொத்தை இவர்களுக்கே தெரியாமல் கடந்த 08.12.2021 அன்று மயிலாடுதுறை மாவட்டம் வேலன்திடல் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் போச்சம்பள்ளி சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளார்.
அதேபோல் கரடியூர் கிராமத்தை சேர்ந்த ஒட்டையான் என்பவருக்கு சொந்தமான சுமார் 1.60 ஏக்கர் நிலத்தையும் மயிலாதுறையை சேர்ந்த விஜயன் என்பவர் கடந்த 08.12.2021 அன்று பத்திர பதிவு செய்துள்ளார். ஒட்டையான் என்பவர் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கடந்த 08.12.2021 அன்று ஒட்டையான் என்கிற போலி நபரை வைத்து போச்சம்பள்ளி சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரடியூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ஒரு மகனும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து, அவருடைய பூர்வீக சொத்தை அவரது ஒரே மகன் காளியப்பன் (46) என்ற ஆண்டு அனுபவித்து வருகிறார். இந்நிலையில் காளியப்பன் அவரது பூர்வீக சொத்தை அவரது இரு மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொடுக்க எண்ணி அது சம்மந்தமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வீரமலை கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் அவர்களிடம் விபரம் கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அவர்களது 1.30 ஏக்கர் நிலம் விஜயன் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டதாகவும், அதன் பேரில் பட்டா மாற்றம் செய்ய மனு வந்திருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர் கூறவே காளியப்பன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக போச்சம்பள்ளி சார் பதிவக அலுவலகத்தில் வந்து கேட்டபோது, விற்பவர், வாங்குபவர் இருவரும் நேரில் வந்து கையொப்பம் செய்துள்ளனர். அதே போல் அனைத்து சான்றுகளும் அளிக்கப்பட்டதால் பத்திரம் பதிவு செய்துள்ளோம் என அஜாக்கிரதையாக பதில் அளித்துள்ளனர். மேலும் பத்திரத்தின் நகலை வாங்கி பார்த்தபோது அதில் உள்ள செட்டிபெருமாள் என போலி நபரை வைத்து பத்திரம் பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரின் சுவாதீன சான்று, ஆதார் அட்டை போலியாக கொடுக்கப்பட்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஓட்டையான் என்பவரு இறந்து 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அவரது வாரிசு தாரர்கள் சுமார் 1.60 ஏக்கர் நிலத்தை ஆண்டு அனுபவித்து வரும் நிலையில், ஓட்டையான் என கூறி அவரை போலவே ஒருவரை வைத்து போலியாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் அதே கிராமத்தை சேர்ந்த கத்திரிகாயன் (எ) கோவிந்தசாமி என்பவரது சுமார் 1.60 ஏக்கர் நிலமும் போலியாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திர பதிவு செய்த வழக்கறிஞர் கபிலன் அவர்களிடம் பேசியபோது, 3 பத்திரங்கள் கிரயம் செய்ய வேண்டுமென விஜயனின் நண்பர் என ஒருவர் என்னை அனுகி, லீகள் ஒபினியன் வேண்டுமென கேட்டார்.
அதன் பேரில் தேவையான ஆவணங்களை கொடுத்தார். அதை வைத்து கடந்த மாதம் 8ம் தேதி பத்திர பதவு செய்தோம். பத்திர பதிவு அன்று மட்டும் விஜயன் நேரில் வந்து 3 பத்திரங்களையும் கிரயம் செய்து கொண்டு போனார். பத்திர பதிவு முடியும் வரை எங்களுக்கு எவ்வித சந்தேகம் ஏற்படவில்லை. பத்திர பதிவு செய்ய டாக்குமென்ட் சார்ஜ் ரூ.2,44,000/- ஆகியுள்ள நிலையில் ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துவிட்ட நிலையில் மீதிப்பணம் ரூ.44,000/-த்தை கொடுத்து விட்டு பத்திரத்தை வாங்கிக்கொள்வதாக சென்றார். இந்நிலையில் கிரயம் நடைபெற்றதை அறிந்த நிலத்தின் உரிமையாளர்கள் நேரில் வந்து பேசியபோதுதான் அனைத்தும் போலியாக வைத்து பத்திர பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது.

நிலத்தின் உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்தனர். இடையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜயன் பத்திரத்தை கொடுக்கும்படி கேட்டார். விபரத்தை கூறவே கோபமடைந்த விஜயன், இதை எப்படி வாங்க முடியும் என எனக்கு தெரியும் என மிரட்டல் விடுத்துள்ளார். அரசியல் ரீதியாக எனக்கு அதிக பலம் இருப்பதாகவும், பத்திரத்தை கொடுத்துவிடும்படி மிரட்டியுள்ளார். போலியாக பத்திர பதிவு நடைபெற்றுள்ளதால், பத்திரத்தை காவல் துறையினரிடமே ஒப்படைப்பேன் என தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் கபிலன். இச்சம்பவம் குறித்து வீரமலை கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் அவர்களிடம் கேட்டபோது, பத்திர பதிவுக்காக கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள வி.ஏ.ஓ. கையொப்பம் போலியானது. அந்த சான்றிதழ்களை நான் அளிக்கவில்லை. இதுகுறித்து வட்டாட்சியரிடம் தகவல் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கரடியூர் கிராமத்தை சேர்ந்த சகாதேவன் அவர்களிடம் கேட்டபோது, போச்சம்பள்ளியில் போலி சான்றிதழ் தயாரிக்கும் கடைகள் உள்ளது. அவ்விடத்திற்கு சென்றால் அனைத்து சான்றிதழ்களையும் 10 நிமிடத்தில் பெற முடியும். கிராம நிர்வாக அலுவலர் சான்று, அனுபவ சான்று, ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், இறப்பு சான்று, வாரிசு சான்று என அனைத்து சான்றிதழ்களும் உடனடியாக வழங்கப்படுகிறது. அவர்களிடம் வட்டாட்சியர் முதல் அனைத்து கிராம நிர்வாக அலுவலரின் சீல் உள்ளதாகவும், வட்டாட்சியர், ஆர்.ஐ. வி.ஏ.ஓ. ஆகியோரின் கையொப்பங்களை மாதிரிகளை வைத்து அப்படியே போட்டுத்தருகின்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், பத்திர பதிவு அலுவலகத்திற்கும் நன்கு தெரியும் என்ற போதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார். மேலும் பத்திர பதிவு அலுவலகத்தில் அதிக அளவு முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற ஆவணங்களை ஆய்ந்தாலே பல முறைகேடுகள் தெரிய வரும் என தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஷர்மிளா பானு அவர்களிடம் கேட்டபோது, தேவையான ஆவணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டதால் எவ்விடத்திலும் சந்தேகம் ஏற்படவில்லை.
இன்று நேரில் வந்து விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 3 நில உரிமையாளர்களும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்க சென்றுள்ளனர்.