தருமபுரி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தருமபுரி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் இப்பணிக்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (21.01.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி , இஆப அவர்கள் தலைமையேற்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:-
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த (2021) ஆண்டு நடைபெற்ற போலியோசொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,53,919 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது அது போலவே இந்த (2022) ஆண்டும் 27-02-2022 அன்று நடைபெறவுள்ள முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன, இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 4080-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது. பாதுகாப்பானது. எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தருமபுரி மாவட்டம் போலியோ நோய் இல்லாத மாவட்டமாக இருக்க இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் இப்போலியோ சொட்டு மருந்து முகாமினை சிறப்பாக நடத்திட இப்பணிக்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள துறை அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு.மலர்விழிவள்ளல், தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவள்ளி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சௌவுண்டம்மாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)
