இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பின்னர் தெரிவித்ததாவது: அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும், கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட திட்டமிட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி திருவிழா மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை (01.12.2021) முதல் தவணை கொரோனா தடுப்பூசியாக 8,41,403 நபர்களுக்கும், இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியாக 4,04,827 நபர்களுக்கும் என மொத்தம் 12,46,230 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 34 சதவீதம் நபர்கள் மட்டும்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 3,61,697 நபர்கள் முதல் தவணை தடுப்பூசிக் செலுத்திக்கொள்ளவில்லை. எனவே, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்ட பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, தருமபுரி மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று (02.12.2021) 455 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இச்சிறப்பு கோரோனா தடுப்பூசி முகாம்களில் விடுபட்ட நபர்கள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க மற்றும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் நியாய விலைக்கடை, தம்மணம்பட்டி நியாய விலைக்கடை, அப்பனஅள்ளி கோம்பை நியாய விலைக்கடை ஆகிய நியாய விலைக்கடைகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு நியாய விலைக்கடைகளில் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா எனவும், உணவுப்பொருட்கள் தரமாக உள்ளதா எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் உணவுப்பொருட்கள் சரியாக உள்ளதா என் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அப்பனஅள்ளி கோம்பை அங்கன்வாடி மையத்தில் உணவுக்கூடத்தை பார்வையிட்டு உணவு தரமானதாக சமைக்கப்படுகிறதா என பார்வையிட்டு மழலைக் குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாபெரும் இச்சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சௌண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் மரு.வாசுதேவன், துணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.மணிகண்டன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.