தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து போக்குவரத்து ஆணையர் / சாலை பாதுகாப்பு ஆணையர் திரு.எஸ்.நடராஜன், இஆப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (02.12.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து ஆணையர் / சாலை பாதுகாப்பு ஆணையர் திரு.எஸ்.நடராஜன், இஆப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி , இஆப., அவர்கள் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள். பின்னர் இதுகுறித்து சாலை போக்குவரத்து ஆணையர் / பாதுகாப்பு ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்கிட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதிகம் விபத்துகள் ஏற்படும் பிளாக் ஸ்பாட் எனப்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர் அலுவலர்கள் அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விபத்துகளை தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை கண்டறிந்து அவற்றை உடனடியாக செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து இம்மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படக்கூடிய பகுதியான தொப்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தருமபுரி சேலம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 6.00 கி.மீ நீளத்திற்கு தொப்பூர் மலைப்பாதை உள்ளது. இதில் கட்டமேடு முதல் காவல் சோதனைச்சாவடி வரை சுமார் 3.00 கி.மீ நீளச் சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலான பயணமாக இருக்கின்றது.
இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகின்ற நிலை உருவாகின்றது. தமிழகத்திலுள்ள அதிக விபத்துகள் ஏற்படும் அதி முக்கிய வாகன எடை விபத்து பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதிகளில் ஏற்படுகின்ற விபத்துகளை தடுப்பதற்கு ஓட்டிகளுக்கு அதிர்வுகள் ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும் வகையில் சாலையில் வரிப்பள்ளங்களும், ஒளி சமிஞ்சைகள் (பிளிங்கர்ஸ்), இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் போன்றவற்றை பொருத்தியும், இப்பகுதியில் வாகனங்கள் அதிகபட்சம் 30 கி.மீ/மணி வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமெனவும், 2-வது கியரில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்பதையும் ஓட்டுநர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகளை துறை அலுவலர்கள் அதிகம் பொருத்த வேண்டும்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதை போல தொப்பூர் மலைபாதையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக விபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீட்பதற்கும், விபத்தில் பாதிக்கப்படுவர்களை உடனடியாக மீட்பதற்கும், விபத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர்செய்வதற்கும் 40 மெட்ரிக் டன் கொண்ட கிரேன் கருவியை உடனடியாக அப்பகுதியில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பாதையில் கடந்த 10 ஆண்டுகளில் 950 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 223 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்கனவே இப்பகுதிகளை ஆய்வு செய்து, விபத்து தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, இத்தேசிய நெடுஞ்சாலையின் தொப்பூர் மலைப்பாதையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்துகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் சோலார் மின்விளக்குகளை உடனடியாக பொருத்த வேண்டுமென உத்தரவிட்டு, அதன்படி, சோலார் மின்விளக்குகளும், உயர் மின் கோபுர விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரியது.
இதேபோல தருமபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து தேவையான இடங்களில் சோலார் மின்விளக்குகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியன் பகுதிகள், இணைப்பு சாலைகளின் பிரிவு பகுதிகள் உள்ளிட்டவற்றில் சோலார் மின்விளக்குகள் பொருத்துதல், சாலையில் மூன்றடுக்கு வேகத்தடைகள் அமைத்தல், சாலைப் பிரிவு குறித்த அறிவிப்பு பொருத்துதல், அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து சாலை ஓரங்களில் தடுப்புகள் அமைத்தல், சாலைகளில் பயணிக்கும் ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் சாலைக்கு அருகாமையில் 24 மணிநேரமும் இயங்கும் அரசு மருத்துவமனைகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகைகளை உடனடியாக பொருத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களை கண்டறிந்து மோட்டார் ஆய்வாளர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு மின்னணு முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களில் இப்பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காக 4472 வாகனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, ரூ.23.94 இலட்சம் மின்னணு முறையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற வாகனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக 24x7 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் தானியங்கி கேமராக்களை பொருத்தி அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு, விபத்துகளை தடுப்பதற்கு ஏதுவாக தானியங்கி கேமராக்கள் பொருத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, துறை அலுவலர்கள் அதற்கான முன்மொழிவினை உடனடியாக அரசிற்து அனுப்பி வைத்திட வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக சாலை பாதுகாப்பு ஆணையர் இவ்வாறு போக்குவரத்து ஆணையர் / திரு.எஸ்.நடராஜன், இஆப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன், இகாப., தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப., இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் திரு.குலோத்துங்கன், போக்குவரத்து துறை சேலம் சரக துணை ஆணையர் திரு.கே.எம். பிரபாகரன், தருமபுரி வட்டார அலுவலர் திரு.தாமோதரன், கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திரு.தனசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.நாரயணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ர.குருராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், எல்.அன்.டி சுங்கச்சாவடி மேலாளர் திரு.நரேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.