இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் / தருமபுரி மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: நமது தாய்த்திருநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இரவு, பகல் பாராது, சுக-துக்கம் பாராது, ஓய்வறியாது அரும் பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரர்கள், காயமடைந்த படைவீரர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையினை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் படைவீரர் கொடி நாள் 2021, முன்னாள் படைவீரர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தன்னுயிரை பொருட்படுத்தாமல் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுப்பட்டு நாட்டின் பெருமை காத்திட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாளான கொடி நாள் முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க அனைவரும் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க முன்வர வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கொடி நாள் நிதி வழங்கிட துறை வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கொடி நாள் நிதி திரட்டப்பட்டது. இதன்படி, பல்வேறு துறைகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட கூடுதலாக நிதி பெறப்பட்டுள்ளது. அத்துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தனது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தன் தாய் திருநாட்டின் நலன் காக்கும் படைவீரர்கள் கொடி நாள் தினத்தன்று மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அனைத்து படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் / தருமபுரி மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையாக 29 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4,79,169/- நிதி உதவியும், 6 முன்னாள் படைவீரர்களுக்கு கண் கண்ணாடி உதவித் தொகையாக ரூ.28,182/-மும், ஒரு முன்னாள் படைவீரருக்கு ரூ.275/- வீட்டு வரிச் சலுகை நிதி உதவியும், முன்னாள் படைவீரர்களின் பார்வையற்ற ஒரு குழந்தைக்கு ரூ.7000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், முன்னாள் படைவீரர்களின் மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகளுக்கு தலா ரூ.7000/- வீதம் ரூ.14000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரரின் மனைவிக்கு ரூ.7000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும் மொத்தம் நபர்களுக்கு ரூ.5,35,619/- மதிப்பிலான பல்வேறு உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் / தருமபுரி மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் கொடி நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / தருமபுரி மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (07.12.2021) கொடிநாள் நிதிக்கு தொகை செலுத்தி, கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் திரு.எஸ் வெங்கடேஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.இளங்கோவன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி. வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு. இராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு .ஜெயக்குமார், உதவி ஆணையர் கலால் திரு. தண்காச்சலம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.