இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 392 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்களிடம் இன்று மனு வழங்கிய தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அள்ளி , இலளிகம், அப்பனஅள்ளி கோம்பை பகுதியைச் சேர்ந்த திரு.எருக்கன்பின்டி என்ற மாற்றுத்திறனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.7,500/- மதிப்பிலான காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அம்மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக வழங்கினார்.
மேலும், தருமபுரி மாவட்டம், நாயக்கன அள்ளி கிராமம், சோலைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திருமதி. கிருஷ்ணவேனி செந்தில் அவர்களின் 9 வயது மகள் அனுஷ்கா கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கமடுகு கிராமத்தில் உள்ள குப்தா குட்டையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் திருமதி. கிருஷ்ணவேனி அவர்களிடம் இன்று வழங்கினார்.
.gif)
