தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த சேவலை சிறுத்தை கவ்விச் சென்றதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் முன்பு இருந்த சேவலை நேற்று இரவு அங்கு வந்த சிறுத்தை கவ்விச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திக்கேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணவனஅள்ளி காப்புக்காடு, எர்ரனஅள்ளி காப்புக்காடு மற்றும் சீராண்டபுரம் வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம், காவேரியப்பன்கொட்டாய், ஜொட்சுணை, காட்டுமாரியம்மன் கோயில், கணவேனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, செங்கோடப்பட்டி, தீத்தாரஅள்ளி, கரம்பு, நிலகுண்டு, கூசுக்கல், பட்றஅள்ளி, எருதுகூடஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய் மற்றும் கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை தனியாக வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வீட்டிற்கு வெளியே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோழி, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை இரவு நேரங்களில் பாதுகாப்பான கூண்டுகளில் அடைத்து வைக்க வேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பான கொட்டகைகளில் அடைத்து வைக்கவும், வீடுகள் மற்றும் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள புதர்கள், செடிகள் மற்றும் மறைவான பகுதிகளை அகற்றி, சுற்றுப்புறம் தெளிவாகத் தெரியும் வகையில் சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரேனும் சிறுத்தையை நேரில் கண்டாலோ அல்லது அதன் கால்தடம் உள்ளிட்ட நடமாட்டத்திற்கான அறிகுறிகளை கவனித்தாலோ, உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பாலக்கோடு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சேவலை சிறுத்தை கவ்விச் சென்றதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வனத்துறையின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
.gif)

