கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுவட்டார மலை மற்றும் வன பகுதிகளிலும், தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது மழை குறைந்ததால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரி கரையோரங்களிலும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு தற்பொழுது நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
காவிரிக் கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.