சமூகப்பாதுகாப்புத்துறையின் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் கிராமத்தில் பிறந்து 2 வாரங்களேயான பெண் குழந்தை மீட்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்களின் முன்னிலையில் குழந்தை நிர்மலா தத்து வள மையத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி இன்று (06.10.2021) ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் கிராமத்தில் பிறந்து 2 வாரங்களேயான குழந்தை ஒன்று அப்பகுதியில் உள்ள ஓட்டல் கடையின் அருகில்; அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டு ஓட்டல் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது, கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் பெண் குழந்தை இருந்ததாகவும், அக்கம் பக்கம் பார்த்த போது அக்குழந்கையின் அருகில் ஒருவரும் இல்லை எனவும் ஓட்டல் கடை உரிமையாளர் கூறி, அக்குழந்தையை அருகில் இருந்த தனியார் ட்ரைபில் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளதாகவும் அம்மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தொலைபேசி தகவல் வரப்பெற்று, அங்கு விரைந்து சென்று அக்குழந்தையினை மீட்டு கொண்டு வரப்பட்டது.
மீட்கப்பட்ட அப்பெண் குழந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்களின் முன்னிலையில் இன்று ஒப்படைக்கப்பட்டு, அப்பெண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கயல்விழி என பெயர் சூட்டினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அக்குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கோவிலூரில் உள்ள குழந்தை நிர்மலா தத்து வள மையத்தின் பொறுப்பாளர் சகோதரி, சுப்ரியா அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
இக்குழந்தையை உரிமை கோருபவர்கள் இன்று (06.10.2021) -லிருந்து 60 நாட்களுக்குள் தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் அல்லது குழந்தை நலக்குழுவை அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இக்குழந்தை மீட்பு பணியில் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.மு.சிவகாந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் திருமதி.சி.சரவணா ஆகியோர் ஈடுபட்டனர்.