இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழ்நிலை,கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஒகேனக்கல்- நாட்றாம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்ற வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கியிறுப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஏரியூர் ஒன்றியம் நாகமரையிலிருந்து சேலம் மாவட்டம் பண்ணவாடி வரை காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவதோடு சமூக கண்ணோட்டத்துடன் வேலை கொடுப்பதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ 600 உயர்த்தி வழங்க வேண்டும்.தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை விரைவாக தொடங்கி அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைவாக பணிகள் தொடங்கி படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இரண்டாக பிரித்து இண்டூரை தலைமை இடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். எண்ணேகொல்புதூர் நீர் பாசன திட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வாழும் இருளர் இன மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும். புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்.தொழிலாளர் சட்டத் தொகுப்பை சுறுக்கியதை கைவிட வேண்டும். போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் எம்.கோபால்,மாவட்ட பொருளாளர் எம்.மாதேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னசாமி சி.விஸ்வநாதன், மாநிலக்குழு உறுப்பினர் கமலாமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.கலைச்செல்வன், சி.மாதையன்,கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.