இது குறித்த மனு விவரம் : தருமபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால் பச்சினாம்பட்டி, அரூர் நகர், நாச்சினாம்பட்டி, நம்பிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீருவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயரும். அரூர் பெரிய ஏரியில் ஒருமுறை தண்ணீர் நிரம்பினால் சுமார் 3 வருடங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருப்பதில்லை. இந்த நிலையில், அரூர் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பிரதான வாய்க்காலில் பல்வேறு இடங்களில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை
மனுகளை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் அரூர் பெரியார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, கடைவீதி, திரு.வி.க நகர் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கும் நிலையுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் பரவும் நிலையுள்ளது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரூர் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியேறும் வகையில் வாய்க்கால்களை தூய்மை செய்ய வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.