மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து கொரோனா நோய் பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுவதும் 16.01.2021 அன்று முதல் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டுவந்தது. பின்பு படிப்படியாக அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
27.10.2021 வரை தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை 782262 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 257631 நபர்களுக்கும் ஆக மொத்தம் 1039893 தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷ்ல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவே, தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும்.
கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட திட்டமிட்ட நிலையில், வார இறுதி நாட்களில் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. 12.09.2021 அன்று 879 இடங்களில் நடந்த முதல் மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 49136 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 19.09.2021 அன்று இரண்டாம் கட்டமாக 215 இடங்களில் 22097 நபர்களுக்கும், மேலும், 26.09.2021 அன்று மூன்றாம் கட்டமாக 379 இடங்களில் 50594 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 04.10.2021 அன்று நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி திருவிழாவில் 380 இடங்களில் 35376 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 10.10.2021 அன்று நடந்த ஐந்தாம் கட்ட தடுப்பூசி திருவிழாவில் 578 இடங்களில் 53820 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
23.10.2021 அன்று ஆறாம் கட்டமாக 601 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 33059 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 65 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை (29.10.2021) வெள்ளிக்கிழமை 378 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் வரும் சனிக்கிழமை (30.10.2021) அன்று 7-வது கட்டமாக 488 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்காக 91510 தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தும் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 50 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தில் நாளை 29.10.2021 வெள்ளிக்கிழமை 378 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் வருகின்ற 30.10.2021 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள 7-வது தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் 488 தடுப்பூசி மையங்களில் நடைபெறவுள்ளது விடுபட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.