வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும் - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று ( (23.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது:- கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரையில் காணொளியின் வாயிலாக நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்றைய தினம் இந்த அரங்கில் நேரில் நடைபெறுகின்றது. விவசாயிகளை இக்கூட்டத்தின் வாயிலாக நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்று இருப்பதைப்போல தொடர்ந்து விவசாயிகள் முகக்கவசம் அணிவதை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களையும் முகக்கவசம் அணிந்து கொரோனா பரவல் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்திட வலியுறுத்த வேண்டும்.
விவசாயிகளிடம் மற்றும் ஒரு வேண்டுகோளாக நான் வைப்பது 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகின்றது. தருமபுரி மாவட்டத்திலும் இதனை முழுமையாக நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே, இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உடனடியாக உங்கள் பகுதியின் அருகில் நடைபெறுகின்ற முகாம்களுக்கு சென்று கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 12 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 51 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். ஏரிகளை தூர்வாறும் போது ஏரிக்கான நீர்வரத்து கால்வாயினையும் சேர்த்து தூர்வாறப்பட வேண்டும். அப்போது அத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைவில் தூர்வாறப்பட உரிய வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள நிலுவைத் தொகை உள்ளிட்ட அது சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் பொருட்டு துறை அலுவலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனப்பிரதிநிதிகளுக்கான கூட்டம் விரைவில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நவீன விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்தி தொழில்களை தொடங்க தேவைப்படும்.
கடனுதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிட மாவட்ட தொழில் மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளும் இத்திட்டங்களை செயல்படுத்திட முன்னுதாரணமாக விளங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனிற்காகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2021) தற்போது வரை 566.8 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 1,09,425 ஹெக்டேர் பரப்பில் வேளாண்மைப் பயிர்கள் மற்றும் 54616 எக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 272 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை சான்று விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சான்று விதைகள் 198 மெட்ரிக் டன் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் தற்பொழுது 10,006 மெட்ரிக் டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 72620 எண்ணிக்கைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 56050 எண்ணிக்கைகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் லை திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனைக்குழு மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாய பெருமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். வட்டார பின்னர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வெளியிட விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப., மாவட்டவருவாய் அலுவலர்/ மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை திரு.ரஹமதுல்லாகான், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் திருமதி.வசந்த ரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகான்தாஸ் சௌமியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் ஊராட்சி திரு.சீனிவாச சேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.