கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, வாங்கிய பணத்தை கொடுத்த பின்பும் மீண்டும்,மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வரும் கந்து வட்டி கும்பலிடமிருந்து எங்களை மீட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.கலைசெல்வனிடம் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஷியபா என்பவர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது நானும் எனது கணவர் ராஜ்குமார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 2019 ம் ஆண்டில் நானும் எனது கணவரும் சிவானி பைனாஸ் உரிமையாளர் ஜான் மகன் ஜெ.பி.நாதன் மற்றும் அவரது மனைவி எலிசபெத்ராணி, மகள் ராணி, அஞ்சலி ஆகியோரிடம் ரூ 4.5 லட்சம் கடன் வாங்கினோம்.15 நாட்களுக்கு வட்டி மட்டும் கட்டச் சொல்லி பணத்தை வசூல் செய்தனர்.
இதுவரை அசல், வட்டி என ரூ 25 லட்சம் வசூல் செய்துள்ளனர், மேலும் ரூ40 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறி மிரட்டி வருகின்றனர், இவர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளேன். மேற்கண்ட நபர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் எங்களை அசிங்கப்படுத்துகின்றனர்.
எனவே மேற்கண்ட நபர்களிடமிருந்து எங்களை மீட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.