மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவி நடைபெறும் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.மனோகரன் தலைமை வகித்தார். முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்க மாவட்டத் தலைவர், பணிவண்ணன், ராமன், மருதய்யன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.புகழேந்தி வரவேற்றார். முனிசிபல் பஞ்சாயத்து மாவட்ட பொது செயலாளர் ஆர்.ராமமூர்த்தி கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.ஏஐடியூசி மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில பொது செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஆர்பாட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி,கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும்.10.05.2000-க்கு பின்பு ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாதம் ஊதியம் ரூ 250 பெறும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.