Type Here to Get Search Results !

பி.கொல்லஹள்ளியில் “என் பட்டு என் பெருமை” திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம்.


பாலக்கோடு:


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்லஹள்ளி கிராமத்தில் பட்டுவளர்ச்சித் துறை சார்பில் “என் பட்டு என் பெருமை” திட்டத்தின் கீழ் செயல் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.


பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சங்கவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மல்பெரி செடிகளைத் தாக்கும் வேர் அழுகல் நோய் மற்றும் வேர் முடிச்சு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு நேரடி களச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


மத்திய பட்டுவாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மல்பெரி செடிகளில் ஏற்படும் நோய்களுக்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் கிருமிநீக்கம் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.


கூட்டத்தில் மத்திய பட்டுவாரிய விஞ்ஞானி மகேஷ் கலந்து கொண்டு, மல்பெரி பயிரில் ஏற்படும் வேர் அழுகல் மற்றும் வேர் முடிச்சு நோய்களின் காரணங்கள், அவற்றின் தீவிரம் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக களச் செயல் விளக்கம் அளித்தார்.


மேலும், மல்பெரி தோட்டப் பராமரிப்பு, மண் பரிசோதனை, மல்பெரி நடவு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, சொட்டு நீர்ப்பாசனம், மண்வளப் பாதுகாப்பு, பூச்சி மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.


இக்கூட்டத்தில் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு வல்லுநர்களிடம் விளக்கம் பெற்றனர்.


இதில் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், இளநிலை ஆய்வாளர்கள் ஜம்பு, பிரபா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பட்டுவிவசாயத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies