Type Here to Get Search Results !

தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன்! தருமபுரி மக்களுக்கு டாப்செட்கோ புதிய வாய்ப்பு.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில் மற்றும் வியாபாரம் தொடங்க டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


டாப்செட்கோ திட்டத்தின் கீழ் தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.


என்னென்ன கடனுதவி?

தனிநபர் கடன்: சிறு வணிகம், விவசாயம் மற்றும் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழித் தொழில்கள் மேற்கொள்ள அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.


குழுக்கடன்: சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் மற்றும் வணிகம் மேற்கொள்ள, ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.


கறவை மாடு கடன்: ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000 வீதம், இரண்டு மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.


இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

2026-2027ஆம் நிதியாண்டு முதல் டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், டாப்செட்கோ கடன் திட்டத்தின் மூலம் பயன்பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies