Type Here to Get Search Results !

ரூ.1 லட்சம் வரை பரிசு! முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரியில் வீரர்களுக்கு அழைப்பு.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தருமபுரி மாவட்டத்தில் வரும் 04.09.2026 முதல் மாவட்ட அளவில் தொடங்க உள்ளன. விளையாட்டில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையிலும், திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.


இந்த ஆண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற 38 விளையாட்டுகளுடன் வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாகிங், கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் 2026 வரை நடைபெற உள்ளன.


யார் பங்கேற்கலாம்?

  • பள்ளிப் பிரிவு: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள்.
  • கல்லூரிப் பிரிவு: இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர்கள்.
  • பொதுப் பிரிவு: 15 முதல் 35 வயது வரையிலானவர்கள்.
  • மாற்றுத்திறனாளிகள்: அனைத்து வயதினரும்.
  • அரசு ஊழியர்கள்: தகுதியுடைய அரசு ஊழியர்கள்.


வெற்றியாளர்களுக்கு பரிசு எவ்வளவு?

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75,000, மூன்றாம் பரிசு ரூ.50,000 வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.75,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.


பதிவு செய்ய கடைசி நாள் – ஆகஸ்ட் 31

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளின் விளையாட்டுப் பிரிவுகள், விதிமுறைகள், வயது வரம்பு, தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies