தருமபுரி, ஆகஸ்ட் 6:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட பிக்கனள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. (Good Crop India LLP) நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊறுகாய் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் அருகிலுள்ள விவசாய நிலங்களில் கலந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
நிறுவனத்தைச் சுற்றியுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் மாசடைந்ததால் பயிர்கள் கருகி வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிநீரும் மாசடைந்ததாக புகார்
இரசாயனக் கழிவுநீர் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் கலந்து, குடிநீர் தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மகேந்திரமங்கலம் ஊராட்சி பகுதியில் இந்த நீரை பயன்படுத்தியதால் சுமார் 10 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், கிராம மக்களுக்கு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
நஷ்டஈடு வழங்க கோரிக்கை
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்குவதுடன், விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பி.கே. சிவா, எஸ்.பி. நாகராஜ், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)