பாலக்கோடு, ஆகஸ்ட் 6:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் கரகதஹள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.
1 கி.மீ. பயணத்திற்கும் முழு சுங்கக் கட்டணமா?
பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயன்படுத்தினாலும், முழு சுங்கக் கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், அந்தச் சலுகை நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆவணங்களை மாதந்தோறும் சமர்ப்பிக்க வலியுறுத்தல்
இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, உள்ளூர் வாகனங்களுக்கான சலுகையைப் பெற மாதந்தோறும் வாகன ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுவதாகவும், இது பொதுமக்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.
சுங்கச்சாவடி முற்றுகை
இந்த நடவடிக்கையை கண்டித்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், கார் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒன்றிணைந்து கரகதஹள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு தலையிட வேண்டும்
உள்ளூர் வாகனங்களுக்கு பொருந்தும் சுங்கக் கட்டண விதிமுறைகள் குறித்து தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)