பாலக்கோடு, ஆகஸ்ட் 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கருகும் நிலையில் 7 மாத கரும்பு
நடப்பாண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காக சுமார் 90 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தனர். தற்போது சுமார் 7 மாதங்கள் வளர்ந்துள்ள கரும்பு பயிர்கள், போதிய தண்ணீர் கிடைக்காததால் பசுமையை இழந்து கருகி சருகாக மாறி வருகின்றன. அரவை தொடங்கும் நேரத்திற்குள் பயிர்கள் முழுமையாக காய்ந்து விடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனமாகும் கரும்பு
கரும்பை தனியார் வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்வதிலும் கட்டுப்பாடுகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி, கருகி வரும் கரும்புகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை இழப்பு
கரும்பு சாகுபடிக்காக கடன் வாங்கி முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது பயிர்கள் கருகி வருவதால் ஏக்கருக்கு சுமார் ரூ.80 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 5,000 ஏக்கர் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளின் நிலையை தமிழக அரசு நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்குவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)