Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் ஆடி அமாவாசை தர்ப்பணம்: முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய குவிந்த பொதுமக்கள்.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


ஆடி அமாவாசையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு புனித நீர்நிலைகள் மற்றும் கோயில்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.



அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய புனித தலமான ஒகேனக்கலுக்கு தருமபுரி மட்டுமின்றி சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களை நினைத்து எள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும், அருவிகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது சுமார் 9,000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கலில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்துள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies