தருமபுரி, ஆகஸ்ட் 12:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே, மகனின் மரணத்தில் சந்தேகம், சொத்துக்காக மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உடைந்த காலுடன் 82 வயது முதியவர் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தூர் அருகே காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (82). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ராஜா என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். ராஜா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகன் ராஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மருமகள் நாகரத்தினத்திற்கும் கடத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அரசு ஆசிரியர் சீராளனுக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருப்பதாகவும் மாரியப்பன் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது சொத்துகளை கேட்டு மருமகள் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையின்போது தனது மனைவி சரஸ்வதி கீழே தள்ளப்பட்டதில் கால் முறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டுவதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்படுவதாகவும், இதனால் தாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் வயதான தம்பதி மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாகரத்தினமும் ஆசிரியர் சீராளனும் ஒரே வீட்டில் வசிப்பதாகக் கூறி, அதுதொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். உடைந்த காலுடன் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த 82 வயது முதியவர், தங்களது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், புகார் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)